மும்பை அணி கலக்கல் * வில் ஜாக்ஸ் அபாரம்

வான்கடே: பிரிமியர் போட்டியில் மும்பை அணி, 4 விக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.
இருவரும் 'லக்கி'
தீபக் சஹார் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் அபிஷேக் சர்மா அடித்த பந்து 'சிலிப்' பகுதிக்கு சென்றது. இதை வில் ஜாக்ஸ் கோட்டை விட, அபிஷேக் கண்டம் தப்பினார். 4வது பந்தில் டிராவிஸ் ஹெட் அடித்தார். இம்முறை 'மிட் விக்கெட்' திசையில் இருந்த கரண் சர்மா நழுவவிட்டார்.
சுதாரித்த இருவரும் டிரன்ட் பவுல்ட் ஓவரில், தலா ஒரு பவுண்டரி அடித்தனர். தொடர்ந்து சஹார் ஓவரில், அபிஷேக் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். ஐதராபாத் அணி 7 ஓவரில் 53/0 ரன் எடுத்தது.
இந்த ஜோடியை பிரிக்க எடுத்த முயற்சிக்கு எதுவும் பலன் கிடைக்கவில்லை. இதனால், கேப்டன் பாண்ட்யா பந்து வீசினார். இவரது 3வது பந்தில் அபிஷேக் (40 ரன், 28 பந்து) அவுட்டாக, ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இஷான் வருகை
மும்பை அணிக்காக 7 ஆண்டு (2018-24) விளையாடிய இஷான் கிஷான், ஐதராபாத் அணிக்காக இம்முறை களமிறங்கினார். 2 ரன் மட்டும் எடுத்த இஷான், வில் ஜாக்ஸ் பந்தில் வீணாக 'ஸ்டம்டு' ஆனார்.
மீண்டும் வந்த பாண்ட்யா (9.4 ஓவர்) பந்தை ஹெட் அடிக்க, 'டீப் மிட் விக்கெட்' திசையில் 'கேட்ச்' ஆனார். துரதிருஷ்டவசமாக இது 'நோ பால்' ஆக, மும்பை ரசிகர்கள் சோகம் அடைந்தனர். இப்போட்டியில் இரண்டாவது முறையாக தப்பினார் ஹெட். இருப்பினும் நீண்ட நேரம் தடுமாறிய ஹெட் (28 ரன், 29 பந்து), வில் ஜாக்ஸ் சுழலில் சிக்கினார்.
பீல்டிங்கில் ஏமாற்றிய போதும், மும்பை பவுலர்கள் சிறப்பான செயல்பாடு காரணமாக ஐதராபாத் அணியின் 'ரன்ரேட்' (13 ஓவர், 91/3) மந்தமாக இருந்தது. கிளாசன், நிதிஷ் குமார் இணைந்தனர். சான்ட்னர் பந்தில் நிதிஷ் குமார் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த 13 வது பந்தில் தான் மற்றொரு பவுண்டரி அடிக்கப்பட்டது.
கிளாசன் நம்பிக்கை
மீண்டும் ஒன்றும், இரண்டுமாக ரன் எடுக்கப்பட்டன. இந்த நெருக்கடியில் 'ஹெலிகாப்டர் ஷாட்' அடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்த நிதிஷ் குமாரை (19), டிரன்ட் பவுல்ட் வெளியேற்றினார்.
18 வது ஓவரை சஹார் வீசினார். இதன் 2 வது பந்தில், போட்டியின் முதல் சிக்சரை அடித்த கிளாசன், அடுத்த மூன்று பந்துகளையும் 4, 4, 6 என விளாசினார். இவர் 37 ரன் எடுத்த போது, பும்ரா போல்டாக்கினார். பாண்ட்யா ஓவரில் அனிகேத் வர்மா, அடுத்தடுத்து சிக்சர் அடிக்க ஸ்கோர் ஒரு வழியாக 150 ரன்களை தாண்டியது. ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162/5 ரன் எடுத்தது. அனிகேத் (18), கம்மின்ஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
களமிறங்கிய ரோகித்
மும்பை அணிக்கு ரிக்கிள்டனுடன், 'இம்பேக்ட்' வீரராக வந்த ரோகித் சர்மா இணைந்து துவக்கம் தந்தனர். ரோகித் 26 ரன் எடுத்த போது, கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். ரிக்கிள்டன் 23 பந்தில் 31 ரன் எடுத்தார். தொடர்ந்து நம்பிக்கை தந்த கம்மின்ஸ், சூர்யகுமார் (26), வில் ஜாக்சை (36) அவுட்டாக்கினார்.
ஹர்ஷல் ஓவரில் பாண்ட்யா (21), அடுத்தடுத்து 6, 4 என விளாச மும்பை வெற்றி எளிதானது. மும்பை அணி 18.1 ஓவரில் 166/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா (21), சான்ட்னர் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாண்ட்யா காயமா

மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. 8வது ஓவரின் 2வது பந்தை வீசினார். அப்போது இடது கணுக்காலில் வலி ஏற்பட, சிக்கல் ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்குப் பின், மீண்டும் பந்துவீசிய இவர், முதல் பந்தில் அபிஷேக்கை அவுட்டாக்கி அசத்தினார்.
* இதே போல அபிஷேக் அடித்த பந்தை (2.5 ஓவர்) பிடிக்க முயன்ற கரண் சர்மா, விரலில் காயமடைய, உடனே வெளியேறினார். முன்னணி பவுலரான இவர், பந்துவீச வரவில்லை.

6 போட்டியில் 32 ரன்
பிரிமியர் தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷான் (ஐதராபாத்) 106 ரன் விளாசினார். இதன் பின் தொடர்ந்து ஏமாற்றிய இவர், 0, 2, 2, 17, 9 என அவுட்டானார். நேற்றும் 2 ரன்னில் திரும்பினார். கடைசியாக களமிறங்கிய 6 போட்டியில் 32 ரன் மட்டும் எடுத்துள்ளார்.

575 பந்து
பிரிமியர் அரங்கில் குறைந்த பந்தில் 1000 ரன் என்ற இலக்கை எட்டிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் (575 பந்து) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆன்ட்ரி ரசல் (545) உள்ளார். கிளாசன் (594), சேவக் (604), மேக்ஸ்வெல் (610), கெய்ல் (615), யூசுப் பதான் (617), சுனில் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

18 பந்து, 47 ரன்
நேற்று ஐதராபாத் அணி முதல் 8 ஓவரில் 65/1 ரன் எடுத்தது. அடுத்த 9 ஓவரில் 50/3 ரன் எடுத்தது. கடைசி 3 ஓவரில் (18 பந்து), ஐதராபாத் அணி 47 ரன் எடுத்தது.

Advertisement