பிரீமியர் லீக்: 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

மும்பை: பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் , மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.



பிரீமியர் லீக்-2025 தொடரின் இன்றைய 33வது லீக் போட்டியில் மும்பை அணியும் ஐதராபாத் அணியும் மோதின , மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற மும்பை அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஐதராபாத் அணி துவக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா அடித்த முதல் பந்திலும், டிராவிஸ் ஹெட் அடித்த 4வது பந்திலும் கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை மும்பை வீரர்கள் கோட்டை விட்டனர். பொறுப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷான், 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். டிராவிஸ் ஹெட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்த போது நிதிஷ்குமார் ரெட்டி, 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஹென்ரிச் க்ளாசென் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி ஓவரில் அனிகேட் வர்மா 3 சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

மும்பை அணியின் ஜாக்ஸ் 2, டிரென் போல்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

163 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 10 ரன்களிலும், ரேயான் நிக்ல்டன் 31 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 26 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 36 ரன்களிலும் , ஹர்திக்பாண்டியா 21 ரன்களிலும், அவுட்டாகினர்.

இறுதியில் 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழத்தியது. திலக் வர்மா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழத்தினார்.

Advertisement