கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு; ரைட்டர் கைது

23


கோவை: போலீஸ் ரைட்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.


கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் ஆக இருப்பவர் ரமேஷ். இவர் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் புகார் தாரர்களிடமும், பாஸ்போர்ட் விபரங்களை சரிபார்க்கவும் லஞ்சம் பெற்று வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன.


இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பாஸ்போர்ட் விபர சரிபார்ப்புக்கு ரூ1,000 லஞ்சம் வாங்கிய ரைட்டர் ரமேஷ், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதையடுத்து, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரைட்டர் ரமேஷ் லஞ்ச பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒளித்து வைத்துள்ளாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.


மேலும், அவரை கைது செய்தும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போலீஸ் ஸ்டேஷனிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement