ரஷ்ய ராணுவத்துக்கு சீனா உதவுகிறது: போர் கைதிகளை காட்டி உக்ரைன் புகார்

4

கீவ் : தங்கள் மீது நடத்தப்படும் போரின்போது, ரஷ்யாவின் ராணுவத்துக்கு சீனா உதவுகிறது என, உக்ரைன் குற்றஞ்சாட்டிஉள்ளது. இதற்கு ஆதாரமாக, இரண்டு சீன போர் கைதிகளை அடையாளம் காட்டிஉள்ளது.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர் மூன்று ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது. போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டார். ஆனால், இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


தங்களுக்கு எதிரான போரில், ரஷ்ய ராணுவத்துக்கு சீனா உதவுவதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதை, ரஷ்யா மறுத்தது. பொய் தகவல் வெளியிட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சீனாவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்ட இரண்டு சீன போர்க்கைதிகளை, உக்ரைன் ராணுவம் அடையாளம் காட்டிஉள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில், அந்த இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, இதுதான் ஆதாரம் என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.


சர்வதேச விதிகளின்படி, போர்க்கைதிகளின் அடையாளத்தை வெளியிடக் கூடாது. அதை மீறி, உக்ரைன் இரண்டு சீன போர்க்கைதிகளை அடையாளம் காட்டிஉள்ளது. அமெரிக்க அதிபரின் போர் நிறுத்த முயற்சிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிடிகொடுக்கவில்லை. அதனால், அந்த முயற்சியை டொனால்டு டிரம்ப் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக உக்ரைன் இவ்வாறு செய்துஉள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement