ஸ்காட்லாந்து 'திரில்' வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 'ஷாக்'

லாகூர்: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி போட்டியில் ஸ்காட்லாந்து அணி, 11 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நேற்று துவங்கியது. 6 அணிகள் மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.
லாகூரில் நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து மோதின. முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து 45 ஓவரில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹேலி மாத்யூஸ் 4 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. மாத்யூஸ் (114) அவுட்டாகாமல் இருந்தார்.
மாத்யூஸ் மன உறுதி...
நேற்று வெஸ்ட் இண்டீஸ் ஒரு கட்டத்தில் 41.3 ஓவரில் 203/8 ரன் எடுத்திருந்தது. அப்போது கடும் வெயில் காரணமாக, தசைப் பிடிப்பால் அவதிப்பட்டார் கேப்டன் மாத்யூஸ். 99 ரன் எடுத்திருந்த இவர், நடக்க முடியாத நிலையில் 'ஸ்டிரெச்சர்' உதவியால் வெளியேறினார். அடுத்த பந்தில் (41.4) கரிஷ்மா (0) அவுட்டானார்.
வேறு வழியில்லாத சூழலில் மீண்டும் களமிறங்கிய மேத்யூஸ், 5வது பந்தில் (41.5) ஒரு ரன் எடுத்து சதம் எட்டினார். 23 பந்தில் 12 ரன் தேவைப்பட்டன. மறுபக்கம் ஆலியா (17) அவுட்டாக, பரிதாபமாக வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்.
52 ஆண்டில்...
பெண்கள் கிரிக்கெட்டின் 52 ஆண்டு வரலாற்றில், ஒருநாள் போட்டியில் 90 ரன்னுக்கும் மேல் எடுத்து, 4 விக்கெட் சாய்த்த முதல் கேப்டன் என சாதனை படைத்தார் மாத்யூஸ்.