தரைப்பாலத்தை புதிதாக கட்டுவீங்களா, மாட்டீங்களா... குமுறும் திருநகர் பொதுமக்கள்

திருநகர்: ஆபத்தான நிலையில் உள்ள திருநகர் - பாலசுப்பிரமணியன் நகர் இடையேயான தரைப்பாலத்தை புதிதாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவது ஏனென்று தெரியவில்லை.

திருநகர் ஏழாவது பஸ் ஸ்டாப்பில் இருந்து பாலசுப்பிரமணியன் நகர் செல்லும் வழியில் நிலையூர் கால்வாய் மீது இந்தத் தரைப்பாலம் அமைந்துள்ளது. திருநகரில் இருந்து பாலசுப்பிரமணியன் நகர், பாலாஜி நகர், ஹார்விபட்டிக்கு செல்வோர் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர். ஏராளமான பள்ளி வாகனங்கள், மணல், ஜல்லி கனரக லாரிகள் இந்தப் பாலத்தின் வழியாகவே செல்கின்றன.

மூன்றாண்டுகளுக்குமுன் அந்தப் பாலத்தின் ஒரு முனையில் ஓட்டை விழுந்தது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அப்பகுதி சிமென்டால் மூடப்பட்டது. இரண்டே மாதங்களில் மீண்டும் ஓட்டை விழுந்தது. இப்படி ஓட்டை விழுவதும், அதைபூசி மறைப்பதும் தொடர்ந்தது.

இந்தப் பாலம் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இது முழுமையாக சேதம் அடைந்தால் 2 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். வாகனங்கள் பாரம் தாங்காமல் கால்வாய்க்குள் விழும் ஆபத்தும் உள்ளது.

விபரீதம் நிகழும் முன்பு சீரமைக்க வேண்டும். அதுவரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன்பின் நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தப் பாலத்தில் சென்ற மணல் லாரி பள்ளத்தில் சிக்கியது. இதனால் மீண்டும் பெரிய ஓட்டை ஏற்பட்டு கைப்பிடிச் சுவரும் உடைந்தது. அதனால் அந்தப் பாலத்தை மாநகராட்சியினர் அடைத்தனர். பொதுமக்கள் தேவிநகர் வழியாக சுற்றி சென்று அவதிப்படுகின்றனர்.

அப்பகுதியினர் டூவீலர்கள் செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்துமாறு கோரிக்கை வைத்ததால், அதனை அனுமதித்துள்ளனர். ஓட்டை விழுந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. கார்கள், ஆட்டோக்களில் வருவோர் அந்தத் தடுப்பை நகர்த்தி வைத்துவிட்டு செல்கின்றனர்.

போக்குவரத்தால் பாலத்தின் ஓட்டை மேலும் சேதம் அடைந்து வருகிறது. தற்போது நடந்து செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். தரைப் பாலத்தை அகற்றி, புதிதாக பாலம் அமையும் நாளை அப்பகுதியினர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement