இல்லம் தேடி சந்திப்பு இயக்கம் நடத்த முடிவு

மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'இல்லம் தேடி சந்திப்பு இயக்கம்' உட்பட போராட்ட அறிவிப்புகளை ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அதற்கான தீர்வு கிடைக்காததால் சமீபத்தில் இந்த அமைப்பின் மாநில மையம் சார்பில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ஜெகநாதன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன், பொதுச் செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு எந்தத் தேதியில் அகவிலைப்படி வழங்கப்படுகிறதோ, அதேதேதியில் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்தம் செய்வதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என பேசியவர்கள் வலியுறுத்தினர்.

இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல மே 29 ல் மாவட்ட கலெக்டர்கள் மூலம் முதல்வருக்கு முறையீடு அளிப்பது, ஜூன் முழுதும் ஓய்வூதியர்களின் இல்லம்தேடி சந்திப்பு இயக்கம் நடத்துவது, ஜூலை 22ல் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா எனவும் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Advertisement