வரி போரில் இந்தியா ஆதரவை கேட்கிறது சீனா; அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தவும் முடிவு

பீஜிங்: அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையில், சீனா கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் தங்கள் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த வரி போரை எதிர்கொள்ள இந்தியாவின் ஆதரவை கேட்கும் அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பட்டாம்பூச்சி இறக்குகளை அடிப்பது ஒரு பெரிய புயலை தூண்டுவிடும் என்கிறது கேயாஸ் தியரி அல்லது, 'பட்டர்பிளை எபக்ட்'. அமெரிக்க கணிதவியலாளரும் வானிலை ஆய்வாளருமான எட்வர்ட் நார்டன் லோரென்ஸ் உருவாக்கியது இந்த கருத்தியல்.
அதாவது ஒரு சிறிய நிகழ்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டதாக இருக்கும் என்பதே அவருடைய கோட்பாடு. இதற்கு உதாரணமாக மாறி வருகிறது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின், பரஸ்பர வரி போர். இது, நம் அண்டை நாடான சீனாவின் நிலைப்பாடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தன் அண்டை நாடுகளின் எல்லைகளை அபகரிக்க பெரும் முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு வருகிறது. இதைத் தவிர, தென் சீனக் கடல் பகுதியின் பெரும்பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதனால் இந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலான நாடுகள் சீனாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், 2020ல் கிழக்கு லடாக்கில் அத்துமீறி சீன ராணுவம் நுழைய முயன்றது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் நிறுத்தப்பட்டன. இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நீண்ட பேச்சுக்குப்பின், படைகளை திரும்பப் பெற, கடந்தாண்டு அக்டோபரில் முடிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி நடவடிக்கை, உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
இதையடுத்து, சீனாவின் நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளாக இருப்பதால், இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் இணைந்து செயல்பட வேண்டும் என, சீனா கடந்த சில வாரங்களாக கூறி வருகிறது.
கடந்த, 1ம் தேதி, இரு தரப்பு தூதரக உறவின், 75வது ஆண்டையொட்டி, நம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, அண்டை நாடுகளுடனான உறவு குறித்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் நடந்தது. இதில், அண்டை நாடுகளுடனான கருத்து வேறுபாடுகளை களைவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, ஜின்பிங் வலியுறுத்தினார்.
பரஸ்பர எதிர்காலம், நன்மைகள், அமைதி உள்ளிட்டவற்றுக்கு, இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன், குறிப்பாக அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படும் முயற்சிகளை தீவிரப்படுத்தப் போவதாக, அவர் அறிவித்தார்.
குறிப்பாக நாடுகளுக்கு இடையேயான பொருட்கள் வினியோக சங்கிலி அறுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, அவர் கூட்டத்தில் பேசினார்.
இது, சீனாவின் இத்தனை ஆண்டுகால நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
இதற்கிடையே, வியட்நாம், மலேஷியா, கம்போடியோ போன்ற முக்கிய அண்டை நாடுகளுக்கு ஜின்பிங் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை உள்பட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணத் தயாராக இருப்பதாக, சீனா ஏற்கனவே கூறியுள்ளது. அதுபோல, ஜப்பான், தென் கொரியா போன்றவற்றுடனான உறவை மேம்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், சமூக வலைதளத்தில் நேற்று மிக நீண்டப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவின் வரி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில், இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். 'உலகின் இரண்டு மிகப் பெரிய வளர்ந்து வரும் நாடுகளாக உள்ளோம். மேலும் இந்தியா - சீனா பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, பரஸ்பரம் நம்பிக்கை, பலனளிப்பதாக உள்ளதால், இணைந்து செயல்பட வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.
இந்தியா, சீனா உறவு குறித்து, டில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:இரு தரப்பு உறவை மேம்படுத்தவும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பணிகளும், சரியான பாதையில் செல்கிறது.இரு தரப்பு உறவில் கடந்தாண்டு இருந்ததைவிட, தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளின் கூட்டு முயற்சி.இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்படும் இறைச்சி கழிவுகள்! ஆய்வு செய்யுமா மாசு கட்டுப்பாடு வாரியம்
-
தமிழக போலீசாருக்கு சத்குரு நன்றி
-
பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' திட்டம்
-
ஹொரமாவு மெயின் ரோட்டில் 15 நாளாக வழிந்தோடும் கழிவுநீர்
-
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
-
புதிய கட்டடத்தில் தம்பதி மர்ம சாவு