விமானம் ரத்து இழப்பீடு என புதுமோசடி; ஏ.ஏ.ஐ., எச்சரிக்கை

1

சென்னை: 'விமானப் பயணம் ரத்தாகிவிட்டது அல்லது தாமதாக புறப்படும்' என, விமான நிலைய ஆணையம் பெயரில் மோசடிகள் நடப்பதாக, ஏ.ஏ.ஐ., எனப்படும் விமான நிலைய ஆணையம் எச்சரித்துள்ளது.

அதன் அறிக்கை:



'ஏ.ஏ.ஐ., எனும் பெயரில், விமானங்கள் தாமதமானதற்கும், ரத்து செய்யப்பட்டதற்கும், இழப்பீடு அளிக்கப்படும்' எனக்கூறி, சில மோசடி கும்பல்களிடம் இருந்து, போலி அழைப்புகள் விமானப் பயணியருக்கு வருகின்றன.

இவை முற்றிலும் தவறானவை. இந்திய விமான நிலைய ஆணையம், பயணியருக்கு நேரடியாக இழப்பீடு சம்பந்தமான அழைப்புகளை, ஒருபோதும் செய்வதில்லை.

இதுபோன்ற போலி அழைப்புகளை நம்பி, பயணியர் தங்களின் தனிப்பட்ட தகவல்களையோ, வங்கி விபரங்கள் போன்றவற்றையோ பகிர வேண்டாம்.

உங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., அல்லது 'இ - மெயில்' உண்மையானதா என்பதை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும்.

இதுபோன்று பொய்யான அழைப்புகள் வந்தால், உடனடியாக காவல்துறை அல்லது 'சைபர் கிரைம்' பிரிவில் புகார் அளிக்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement