கொப்பாலின் இட்டகி மஹாதேவா கோவில் உலக பாரம்பரிய சின்னமாக்க நடவடிக்கை

கொப்பால்: கட்டட கலைக்கு பெயர் பெற்ற கொப்பால் மாவட்டத்தில் உள்ள இட்டகி மஹாதேவா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பரிந்துரைக்கும்படி, சுற்றுலா துறை செயலருக்கு, இந்திய தொல்லியில் துறை கடிதம் எழுதி உள்ளது.

இது தொடர்பாக, மாநில சுற்றுலா துறை செயலருக்கு, இந்திய தொல்லியல் துறை எழுதி உள்ள கடிதத்தில், 'கர்நாடகாவில் ஹம்பி, பேலுார், ஹலேபீடு ஆகியவை உலக அளவில் புகழ் பெற்றுள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே உலக சுற்றுலாவில் இடம் பெற்றுள்ளன.

அதுபோன்று, கட்டட கலையில் பெயர் பெற்ற கொப்பால் மாவட்டத்தில் உள்ள இட்டகி மஹாதேவா கோவிலையும் உலக சுற்றுலாவில் இடம் பெற செய்ய வேண்டும். இந்த கோவில் தொடர்பான தகவலை, சர்வதேச நினைவு சின்னங்கள் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கவும்' என்று குறிப்பிட்டு உள்ளது.

வரலாற்று ஆசிரியர் சித்தலிங்கப்பா கொட்னேகல் கூறியதாவது:

இக்கோவிலில் உள்ள கல்வெட்டின்படி, 12வது நுாற்றாண்டில் விக்ரமாதித்யா ராஜாவின் படை ஜெனரலாக இருந்த மஹாதேவாவால் கோவில் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு துாணிலும் உள்ள நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள், இதன் தனித்துவத்தை விளக்குகிறது. 'ராஜாவின் கோவில்' என்றும் அழைக்கின்றனர். இத்தகைய கோவில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால், இப்பகுதி சுற்றுலா தலம் மேம்பாடு அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கூறியதாவது:

கர்நாடகாவில் இட்டகி மஹாதேவா கோவில், கட்டட கலைக்கு பெயர் பெற்றதாகும். கோவிலை, உலக பாரம்பரிய சின்ன அமைப்பான யுனெஸ்கோ பட்டியலில் இணைக்க வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலிடம் தெரிவித்திருந்தேன்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு, அவர் தெரிவித்திருந்தார். அனைத்தும் நல்லபடியாக நடந்தால், விரைவில் இக்கோவில் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம் பெறும். அதன்பின், இக்கோவிலை சீரமைக்க, உலகளவில் நிதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement