அமைச்சர் பேத்தி சுட்டுக்கொலை
கயா : பீஹார் மாநிலம் கயா லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் ஜிதன்ராம் மஞ்சி. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் நிறுவனரான இவர், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் குறு, சிறு தொழில்கள் அமைச்சராக உள்ளார்.
இவரது பேத்தி சுஷ்மா தேவி வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் வேறு ஜாதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவரை, 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த ரமேஷ் மனைவி சுஷ்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்றொரு அறையில் குழந்தைகளும், சுஷ்மாவின் சகோதரி பூனம் குமாரியும் இருந்தனர்.
ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் மனைவி சுஷ்மாவை சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த குழந்தைகள் மற்றும் பூனம் குமாரி சுஷ்மா உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை தேடிவருகின்றனர்.