'நம் பிரச்னைகளுக்கு நம்மிடமே தீர்வு'; ஏ.ஐ., ஆய்வில் சென்னை ஐ.ஐ.டி., வெற்றி

சென்னை: ''நாட்டில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைந்த செயற்கை நுண்ணறிவு திறன் தொடர்பான ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில், 'பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்' உடன் இணைந்து, 'ஜீரோ லேப்ஸ்' சார்பில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முதல் பதிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.
நிகழ்வில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியதாவது:
உலகில் சிக்கலான பணிகளை எளிதாக செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதலில், கற்பித்தல், பின் கேள்வி கேட்டல் எனும் இரண்டு நிலைகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது.
இந்த துறைக்கு, இரண்டு மிகப்பெரிய சவால்கள் உள்ளன. அதாவது, அதிக வன்பொருட்களைக் கொண்ட ஜி.பி.யு., எனும், 'கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட்!' இன்னொன்று, அதிக மின்சார நுகர்வு.
முதல் தேவையை பூர்த்தி செய்ய, தேவையான வன்பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை உள்ளது. அடுத்து, வளர்ந்து வரும் நாடுகள், அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில், மின்சார பற்றாக்குறை உள்ளது. இவற்றை சமாளித்தால் தான், அந்த நாடுகளில் ஏ.ஐ., பயன்பாடு பரவலாகும் என்ற நிலை உள்ளது.
நாம் வளரும் நாடு என்பதால், செலவும், மின் தேவையும் குறைவான ஏ.ஐ., மாதிரிகள் தான், நமக்கு உகந்தவை. இதுகுறித்து, ஏழெட்டு மாதங்களாக ஆய்வு செய்தோம். அதில், ஜீரோ லேப்ஸ், பிரவர்த்தக் வாயிலாக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல்கட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, 'காம்பாக்ட் ஏ.ஐ.,' என்ற பெயரில் உருவாக்கி உள்ளோம்.
இதனால், மின்சார பயன்பாடு குறையும். தற்போது வெளியிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தளத்தில், சிக்கலான கணக்குக்கு தீர்வு காண்பது, கட்டுரையின் சிறப்பம்சங்களைப் பகுப்பது, அது சார்ந்த கேள்விகளை கேட்பது எனும் வகையில் முதல்கட்ட ஆராய்ச்சியாக இது உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வளர்ந்த நாடுகளை போல் அல்லாமல், நம் நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில், ஆய்வு செய்து வருகிறோம்.
சாதாரண கம்ப்யூட்டர் உதவியுடன், அவர்களின் தொழில் தேவைகள் குறித்து கற்பித்து, அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்யும் வகையில் வடிவமைக்க உள்ளோம்.
கல்வித் துறையில் பாடங்களைக் கற்பித்து, ஆசிரியர்களுக்கு உதவியாக, மாணவர்களுக்கு கூடுதல் தொழில்நுட்பங்களை விளக்கும் வகையிலும் இந்த ஏ.ஐ., பயன்படும். இதனால், வேலைவாய்ப்பு குறையும் என்பதில் உண்மையில்லை. ஆள் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 'சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்' தலைமை அதிகாரி வில்லியம் ஜே.ராடுசெல், பெங்களூரு ஐ.ஐ.டி.,யின் முன்னாள் இயக்குனர் சடகோபன், 'எபிஜி செரன்ட் பைபரியேஷன்' நிறுவனர் ராஜ்சிங் பங்கேற்றனர்.




மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்