பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பள்ளி சமையல் கூடத்தில், காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில், சத்துணவு பொறுப்பாளர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 117 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, மாணவர்களுக்கு காலை டிபன், மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. நேற்று காலை 11:40 மணியளவில் பள்ளி எதிரில் உள்ள சமையல் கூடத்தில் சமையல் செய்யும் பணி நடந்தது. அப்போது, சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரெகுலேட்டர் டியூப் பழுதாகி காஸ் கசிந்து, திடீரென தீப்பிழம்பாக மாறி அறை முழுவதும் அனல் பரவியது.
இதனால் சத்துணவு பொறுப்பாளர் சரிதா, 40; உதவியாளர் ஜெயக்கொடி, 45; ஆகியோர் மீது தீ பரவியது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த ஜெயக்கொடி மகன் செந்தமிழ்ச்செல்வன், 24; ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டார்.
விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிராம மக்கள் உதவியுடன் மூவரையும் மீட்டு, சிலிண்டர் மற்றும் அடுப்புகளை அப்புறப்படுத்தினர்.
பின், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூவரையும் பி.டி.ஓ., சங்கர், வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் சந்தித்து, விசாரித்தனர்.
கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சி.இ.ஓ., எல்லப்பன் ஆகியோர் தீ விபத்து குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கு காரணம்
காலை உணவுத் திட்டத்தில் புதிதாக ஒற்றை இரும்பு அடுப்பு, சிலிண்டர்கள், ரெகுலேட்டர் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. அதில், தரமில்லாத ரெகுலேட்டர் டியூப் பழுதாகி காஸ் கசிந்துள்ளது. சமையல் அறையில் மேலும் 4 சிலிண்டர்கள் இருப்பு இருந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, அனைத்தையும் அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதிய உணவு ஏற்பாடு
சத்துணவு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் சமையல் பணி பாதித்தது. மதிய சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பாதிக்காத வகையில், ஓட்டலில் இருந்து தலைமை ஆசிரியர் சாப்பாடு வரவழைத்து, மதிய உணவு வழங்கினார். பின்னர், வழக்கம்போல வகுப்புகள் தொடர்ந்தன.
ஆய்வு கட்டாயம்
வீடுகள், ஓட்டல்களில் சிலிண்டர், ரெகுலேட்டர், டியூப் ஆகியவற்றின் தரம், பழுது குறித்து அந்தந்த காஸ் நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து, அறிக்கை வழங்கப்படும். அதில் பழுதான உபகரணங்களை மாற்றி, காஸ் ஏஜன்சியிடம் பதிவு செய்யாவிட்டால் அதற்கடுத்த மாதம் சிலிண்டர் வழங்கப்படாது. அது போல், காலை உணவுத் திட்டத்திற்கு வழங்கிய சிலிண்டர், அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை ஆய்வு செய்வது கட்டாயம்.
மேலும்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!