ஏரிகளுக்கு கண்காணிப்பு கேமரா பெங்., மாநகராட்சி அலட்சியம்

பெங்களூரு: பெங்களூரின் ஏரிகளை சுற்றிலும், கேமரா பொருத்தும் திட்டம் வகுத்து, ஐந்து ஆண்டுகளாகியும், பணி துவக்கப்படவில்லை. இதன் விளைவாக ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் அசுத்தமடைவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

பெங்களூரின் ஏரிகளின் நிலை குறித்து, அதிருப்தி தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஏரிகள் ஆக்கிரமிப்பை தடுக்கவும், நீர் அசுத்தமடைவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி, 2019ல் பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

அதன்படி மாநகராட்சியும், ஏரிகளின் பாதுகாப்புக்கு, 5 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தது. ஆனால் இந்த திட்டம், இன்னும் கிடப்பிலேயே உள்ளது; செயல்பாட்டுக்கு வரவில்லை.

மாநகராட்சி தகவலின்படி, பெங்களூரில் 210 ஏரிகள் உள்ளன. இவற்றில் 167 ஏரிகள், பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. 33 ஏரிகள் பி.டி.ஏ., வசம் உள்ளன. கர்நாடக வனத்துறையிடம் ஐந்து, ஏரி மேம்பாட்டு ஆணையத்திடம் நான்கு, பெங்களூரு மெட்ரோ நிறுவனத்திடம் ஒரு ஏரியும் உள்ளன.

இந்த ஏரிகளின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால், ஆக்கிரமிப்பு நீடிக்கிறது. ஏரி வளாகத்தில் பொது மக்கள் குப்பை வீசியெறிவதும் தொடர்வதால், தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.

இதுகுறித்து, ஏரி பாதுகாப்பு ஆர்வலர் பாலாஜி ரகோத்தம் கூறியதாவது:

பெங்களூரில் ஏரிகளை பாதுகாக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தும் அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் ஐந்து ஆண்டுகளாகியும் கேமராக்கள் பொருத்தவில்லை. ஏரிகள் ஆக்கிரமிப்பு நீடிக்கவும், குப்பையை கொட்டவும் மாநகராட்சி மறைமுகமாக வாய்ப்பு அளித்துள்ளது.

மஹாதேவபுரா மண்டலத்தின், சில ஏரிகளுக்காவது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி பல முறை வேண்டுகோள் விடுத்தும், மாநகராட்சி பொருட்படுத்தவில்லை. அதிகாரிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். அதிகாரிகள் தங்களின் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஏரிகளுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்த, டெண்டர் அழைக்கப்பட்டது. அதில் யாரும் பங்கேற்கவில்லை. பல்வேறு காரணங்களால், இரண்டாவது முறையும் டெண்டர் அளிக்க முடியாமல் போனது.

தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த 11 ஏரிகள் அடையாளம் காணப்பட்டன. முதற்கட்டமாக ஜக்கூர், எலஹங்கா, தாசரஹள்ளி, கெம்பாம்புதி, விபூதிபுரா ஏரிகளுக்கு மேமரா பொருத்தும் பணி, விரைவில் துவங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement