காங்கிரஸ் அரசை மக்கள் சபிக்கின்றனர் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேச்சு

குடகு: “காங்கிரஸ் அரசை மாநில மக்கள் சபிக்கின்றனர்,” என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.

காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக, 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை'யை கடந்த 7ம் தேதி பா.ஜ., துவக்கியது. மூன்றாவது நாளான நேற்று, குடகு மடிகேரியில் யாத்திரை நடந்தது. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:

கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு கிருஷ்ணா மேலணை; மேகதாது திட்டங்களை வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்ற மறந்து விட்டனர்.

அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர் என்று தன்னை கூறிக் கொண்டு, முதல்வர் சித்தராமையா ஓட்டு சேகரித்தார். ஆனால், முதல்வரான பின், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அவர் மறந்துவிட்டார்.

போராடுவோம்



மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உள்ளன. ஆனால் சிறுபான்மையினரை மட்டும், திருப்திப்படுத்தும் அரசியலை சித்தராமையா செய்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுவோம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 50 அத்தியாவசிய பொருட்கள், விலையை உயர்த்தி மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

காங்கிரசுக்கு ஓட்டு போட்ட மக்கள் சித்தராமையாவையும், அரசையும் சபிக்கின்றனர்.

பொய் தகவல்



மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தினாலும், மக்கள் மீது சுமையை ஏற்படுத்தவில்லை. சமையல் காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட விஷயத்தில், மக்களிடம் பொய் தகவலை சித்தராமையா பரப்புகிறார்.

அரசு பணிகளை ஒப்பந்தம் எடுப்பதில், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.

எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 38,500 கோடி ரூபாயை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். அரசு செய்யும் தவறை மக்கள் முன் கொண்டு செல்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மைசூரு எம்.பி., யதுவீர் உள்ளிட்ட தலைவர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.

Advertisement