இயற்கை அன்னை தாலாட்டும் காவிரி நிசர்கதாமா!

சூரியனின் ஆக்ரோஷத்தை தாங்க முடியாமல், தத்தளித்த குடகு மாவட்டத்தை வருணன் குளிர வைத்துள்ளார். பசுமை திரும்புகிறது. சுற்றுலா பயணியரும் குடகுக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர். இங்குள்ள ஹோம் ஸ்டேக்கள் நிரம்பியுள்ளன.
குடகு மாவட்டம், இயற்கை காட்சிகள் சூழ்ந்த அழகான மாவட்டமாகும். ஜீவநதி காவிரி உற்பத்தியாகும் திருத்தலமாகும். குடகில் ஆறு, மலைகள், நீர் வீழ்ச்சிகள், கோவில்கள் என, அனைத்தும் உள்ளன. பசுமையான காபி தோட்டங்கள், எஸ்டேட்டுகள் உள்ளன. காவிரி நிசர்க தாமா தீவும் மக்களை கவர்கிறது.
குஷால் நகர் அருகில் உள்ள, காவிரி நிசர்க தாமா கோடைக்காலத்திலும் குளுகுளுவென்ற அனுபவத்தை அளிக்கிறது. வெளியே வெப்பம் தகிக்கும். காவிரி நிசர்க தாமாவுக்குள் நுழைந்து நடந்து சென்றால் வெயில் தெரியாது. வானுயரத்துக்கு நெடுநெடுவன வளர்ந்துள்ள மரங்கள், அதன் நடுவில் வளர்ந்துள்ள மூங்கில்கள், வெயில் உள்ளே வராமல் தடுக்கின்றன.
பழைய மூங்கில்கள் உலர்ந்து விழுந்தன. தற்போது புதிதாக மூங்கில்கள் வளர துவங்கியுள்ளன. இதனால் குளிர்ச்சியான, அழகான சூழ்நிலை உருவாகியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இது காடாக இருந்தது. மூங்கில் மரங்கள் மட்டுமே இருந்தன. பறவைகள், விலங்குகள் இருந்தன. சுற்றிலும் காவிரி ஆறு பாய்ந்தது. இங்கு வர யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.
ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை, ஒரு அழகான சுற்றுலா தலமாக்க வேண்டும் என, அன்றைய வனத்துறை அதிகாரி தோர்வே மண்டல அதிகாரி நாராயண் விரும்பினர். அவரின் தொடர் முயற்சியால், 1989ல் காவிரி நிசர்கதாமா அமைந்தது. தற்போது குடகு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.
காவிரி ஆற்றுக்கு குறுக்கே உள்ள தொங்கு பாலத்தில் நடப்பதற்காகவே, பெருமளவில் மக்கள் வந்தனர்.
தொங்கு பாலத்தில் தள்ளாடியபடி நடந்து, காவிரி நிசர்க தாமாவுக்கு செல்வதே, உல்லாசமான அனுபவத்தை அளிக்கும்.
தற்போது புதிதாக தொங்கு பாலம் கட்டப்பட்டிருந்தாலும், பழைய பாலமும் உள்ளது. இதன் பக்கத்திலேயே, மற்றொரு தீவும் உள்ளது. அந்த தீவையும் மேம்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காவிரி நிசர்கதாமாவில், சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான யானை சபாரி, சிற்றுண்டி வசதி, படகு சவாரி உள்ளது. தங்குவதற்கு காட்டேஜ்களும் உள்ளன.
பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, சிறிது நேரம் அமைதியான சூழ்நிலையில் பொழுது போக்க விரும்புவோருக்கு, இது தகுதியான இடமாகும். இயற்கையின் மடியில் தவழ்ந்து, காவிரி ஆற்றங்கரையில் நடந்து, படகு சவாரி செய்து மகிழலாம்.
இது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
மடிகேரியில் இருந்து, 30 கி.மீ., குஷால் நகரில் இருந்து 2 கி.மீ., தொலைவில் காவிரி நிசர்கதாமா உள்ளது. பெங்களூரில் இருந்து, 238 கி.மீ., தொலைவில் உள்ளது. பெங்களூரு, மைசூரு உட்பட முக்கிய நகரங்களில் இருந்து, குஷால் நகருக்கு அரசு, தனியார் பஸ் வசதி உள்ளது. ரயில்களும் இயக்கப்படுகின்றன. வாடகை வாகன வசதியும் உள்ளது. காவிரி நிசர்க தாமாவுக்கு செல்ல, காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை அனுமதி உள்ளது. பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறார்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யானை சவாரிக்கு 25 ரூபாய், படகு சவாரிக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். காவிரி நிசர்கதாமா குறித்து, தகவல் வேண்டுவோர் 88949 15059 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர் வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி.
- நமது நிருபர் -
மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்