செழித்திருந்த கண்டம்

ஆஸ்திரேலியா என்றாலே பாதிப் பாலைவனமாக இருக்கின்ற கண்டம் என்று தானே நினைக்கிறோம்? இன்றைய தேதியில் அது உண்மைதான் என்றாலும் முற்காலங்களில் ஆஸ்திரேலியா செழிப்பான பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்புக் கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நியூ சவுத் வேல்ஸ். இங்கே அகழாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர்கள் நன்னீரில் வாழ்கின்ற ஃபெருயாஸ்பிஸ் பிராக்சி (Ferruaspis brocksi) இனத்தைச் சேர்ந்த மீனின் தொல்லெச்சத்தைக் கண்டுபிடித்தனர்.

இது 1.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இன்றைய நிலையில் வறண்ட நிலமாக இருக்கக்கூடிய இந்தப் பகுதி ஒரு காலத்தில் மழைக்காடாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்த இடத்தில் மீனின் தொல்லெச்சம் கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை. இது பெரிய அளவில் சிதையாமல் கிடைத்துள்ளது. மீனின் வயிற்றில் அது உட்கொண்ட உணவு கூடப் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் கிடைக்கும் பிற தொல்லெச்சங்களை ஆராய்ந்தால் இந்த பகுதி எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதி பசுமையான காடுகளாக இருந்திருக்க வேண்டும். கண்ட நகர்வின் காரணமாக ஆஸ்திரேலியா வடக்கு நோக்கி நகர்ந்ததாலும் கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும் அடர்ந்த காடுகள் பாலைவனமாகவும் வறண்ட நிலமாகவும் மாறியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Advertisement