அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பு போர்; ரஷ்யா கிண்டல்

1

மாஸ்கோ: சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வரி விதிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா கிண்டலடித்து மீம் வெளியிட்டுள்ளது. இதற்கு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எலான் மஸ்க், சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.


@1brஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது. இதனால், சீனாவுக்கான வரியை 104 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப். சீனா விடாப்பிடியாக அமெரிக்காவுக்கான வரியை, 84 சதவீதமாக உயர்த்தியது.

ஆனால், ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்ததால், தற்போதைய வரிவிதிப்பு பட்டியலில் ரஷ்யாவின் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.


ஆனால், உண்மையில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே பல துறைகளில் வர்த்தகம் சீராக தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், உக்ரைனுடன் போரை நிறுத்தாவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


அமெரிக்கா, ரஷ்யா இடையே கடந்த 2021ம் ஆண்டு ரூ.3,018 கோடிக்கு வர்த்தகமாகி இருந்த நிலையில், 2024ல் அது ரூ.350 கோடியாக சரிந்துள்ளது. இந்நிலையில், சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்கா வரி விதிப்பு சண்டையில் ஈடுபட்டு வருவதை கிண்டலடிக்கும் விதமாக, கென்யாவுக்கான ரஷ்யா தூதரகம் ஒரு மீமை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.



அதில், உலக நாடுகள் வரிப்போரில் சண்டையிட்டு கொள்வது போன்றும், ரஷ்யா ஒரு ஓரமாக படுத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்ற போட்டோ இடம்பெற்றுள்ளது. இந்த மீம் போட்டோவுக்கு தொழிலதிபரும், டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளவருமான எலான் மஸ்க், சிரிப்பது போன்ற எமோஜியை வெளியிட்டுள்ளார்.

Advertisement