லாரி கவிழ்ந்து கோர விபத்து; தந்தை மகன், மகள் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூரில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை மகன், மகள் ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வரவூர் பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் மோகன். இன்று காலையில் மில்லுக்கு சென்று மிளகாய் தூள் அரைக்க பைக்கில் புறப்பட்டார். ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயதான மகன் நிரோஷன், 3 வயதான மகள் சியாஷினியும் அப்பாவுடன் பைக்கில் செல்ல ஆசைப்பட்டனர்.


உடனே பிள்ளைகளையும் தன்னுடன் பைக்கில் ஏற்றிக்கொண்டு திருமாளம் என்ற இடத்துக்கு சென்றார் மோகன். அங்குள்ள மில்லில் மிளகாய் தூள் அரைத்து விட்டு மீண்டும் மூன்று பேரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருமாளம் ஊரை கடப்பதற்குள் மோகன் பைக் விபத்தில் சிக்கியது. எதிரே ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. லாரி கவிழும் போது மோகன் பைக் அதன் அடியில் மாட்டிக்கொண்டது.



இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மோகன், அவரது மகன் நிரோஷன், மகள் சியாஷினி மூவரும் இறந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொக்லைன் எந்திரம் உதவியுடன் லாரியை தூக்கி, 3 பேர் உடல்களையும் மீட்டனர்.லாரி அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று அந்த ஊர் மக்கள் கொதித்தனர்.


அப்பா, மகன், மகள் என 3 பேரை பலி கொண்ட கோர விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement