மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: சீனா உறுதி

6

வாஷிங்டன்: பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன எனக்கூறியுள்ள சீனா, மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் எனத் தெரிவித்து உள்ளது.


அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், டிரம்ப் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவும் வரி விதிக்க துவங்கியது. இதனால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை டிரம்ப் 104 சதவீதமாக உயர்த்தினார். சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கான வரியை 84 சதவீதமாக உயர்த்தியது.


இது தொடர்பாக சீன அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ஹே யோங்கியான் கூறியதாவது: அமெரிக்கா உடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை. அதேநேரத்தில் அந்நாட்டின் நெருக்கடிக்கு அடி பணிய மாட்டோம். சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விரும்பினால், அதற்கு சீனா தயாராக உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை பரஸ்பரம் சமத்துவம் மற்றும் மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும்.
ஆனால், மிரட்டல், நெருக்கடி மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் சீனாவை கையாளவது சரியான முடிவு கிடையாது. வர்த்தக போரில் யாரும் வெற்றி பெறப்போவது இல்லை. அமெரிக்கா தனது சொந்தப் பாதையில் பயணிக்க முடிவு செய்தால், சீனாவும் கடைசி வரை போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement