கோவை, திருப்பூர் விசைத்தறி தொழில் பாதிப்பு: போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்கிறார் இ.பி.எஸ்

1

சென்னை: கோவை, திருப்பூர் விசைத்தறி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தி.மு.க. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் ஆவார்கள். இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

இது தொடர்பாக, கழகத்தின் சார்பில் சூலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப் பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விடியா திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இ.பி.எஸ். அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement