மாநிலம் முழுதும் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவைக்கு மாற்றி மறுபதிவு செய்து விசாரணை துவக்கம் 

கோவை:மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, 15 வழக்குகள் மறுபதிவு செய்து புதிய வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

தனியார் 'யூடியூப்' சேனலில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதுாறாக பேசியதாக 'யூ டியூபர்' சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக சென்னை மற்றும் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, திருச்சி, சேலம், முசிறி, ஊட்டி, நாகப்பட்டினம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண் போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதவிர, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது திருச்சி, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிபேட்டை, திருச்சி மாநகர், பெரம்பலுார், சிவகங்கை, தாம்பரம், சேலம் மாநகர், சென்னை, நாகப்பட்டினம், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பதியப்பட்ட 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட வழக்குகளின் பழைய எப்.ஐ.ஆர்.,களை கொண்டு கோவையில் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், 15 வழக்குகளையும் மறுபதிவு செய்து புதிதாக வழக்கு பதிவு செய்து கோவை போலீசார் விசாரணை துவங்கினர்.

Advertisement