ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

21


ஐதராபாத்: ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான 800 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பத்தாண்டுக்கு முன் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், தற்போது ஜெகன் ரெட்டி, டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 405 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.


ஜெகன் ரெட்டி பெயரில் உள்ள 27.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், 377 கோடி ரூபாய் மதிப்புள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. ஆனால், முடக்கப்பட்ட தனது நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு 793 கோடி ரூபாய் என்று டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம், ஜெகன் ரெட்டிக்கு சொந்தமான ரகுராம் சிமென்ட் நிறுவனத்தில் 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்கு பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேரில் சுரங்கம் அமைப்பதற்காக அந்த நிறுவனத்துக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நிலம் தான் தற்போது முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement