பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..





கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இந்திய பெண்களுக்கான கால்பந்து தொடர் (ஐ.டபுள்யூ.எல்)முடிவுக்கு வந்துள்ளது,நடந்து முடிந்த போட்டிகளில் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக பெற இருக்கிறது,இதில் முன்னாள் சாம்பியனும் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றதுமான தமிழக சேது அணி தற்போது ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது,இந்த தள்ளாட்டம் ஏன்?இதில் இருந்து எப்படி மீள்வது எப்படி?
Latest Tamil News
வலுவான மற்றும் கடினமான பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் கால்பந்தை பெண்கள் விரும்புவதும் அதில் ஆர்வம் கொண்டு விளையாட வருவதும் இன்றைக்கும் ஒரு அபூர்வமான நிகழ்வாகும் இருந்த போதும் இதில் பேரார்வம் கொண்ட பெண்களைக் கொண்டு மதுரையில் உருவான அணிதான் சேது எப்.சி அணியாகும்.இன்றைய தேதிக்கு இந்த அணிதான் தமிழகத்தின் சார்பில் அகில இந்திய அளவில் சென்று வரும் அணியுமாகும்.இந்திய பெண்கள் கால்பந்தாட்டத்தின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்து வரும் அணிகளில் ஒன்றான “சேது எஃப்சி” உருவான சில ஆண்டுகளிலேயே தேசிய மட்டத்தில் பிரபலமான அணியாக மாறிய அணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேது அணி, ஆரம்பத்திலேயே தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, 2018-19ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் லீக் சாம்பியனாக மாறியது. அந்த வெற்றி, தமிழகத்திலும் நாடு முழுவதும் உள்ள பெண்கள் கால்பந்தாட்ட ரசிகர்களிடையே பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியது. இளம் வீராங்கனைகளுக்கு பயிற்சி, வாய்ப்பு, களங்கள் என அனைத்தையும் அளித்தது இந்த அணி. தமிழ்நாடு மாநில அளவில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றது. 2019-20, 2020-21, மற்றும் 2021-22 சீசன்களில் மாநில சாம்பியனாக மாறியது.
Latest Tamil News
அணியின் கட்டுப்பாடான நிர்வாகம், திறமையான பயிற்சியாளர்கள், மற்றும் எதிரிகளுக்கு சவால் விடுக்கும் வீராங்கனைகள் ஆகியவை அணியின் வெற்றிக்கு அடிப்படை காரணங்கள். பயிற்சியில் சீரான முறைகள், அடிப்படை திறன் மேம்பாடுகள், மற்றும் உடற்கூறு வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அணியை தேசிய ரீதியில் வலுப்படுத்தியது.

ஆனால் சமீப வருடங்களில் சேது அணியின் முன்னேற்றம் மந்தமாகியுள்ளது. கோகுலம் கேரளா அணுி,ஒடிசா எப்சி அணி போன்ற அணிகள் புதிய யுத்திகளுடன் புதிய வீராங்கனைகள் மற்றும் வெளிநாட்டு ஆதரவுடன் வலுப்பெற்று வருவதை இங்கு கவனிக்க வேண்டும்.இதில் எல்லாம் சேது எப்சி அணியினரிடம் மந்த நிலை நிலவுவதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இப்போதும் தாமதமில்லை. புதிய வீராங்கனைகளுடன் புதிய உத்திகளுடன் நல்ல பல முயற்சிகள், திறமையான பயிற்சிகள், நிதி ஆதரவினைப் பெற்றால், மீண்டும் சேது எப்சி அணி வெற்றிகளை குவித்து சாம்பியனாக மாறும்,கொஞ்சம் முயற்சித்தால் பீனிக்ஸ் பறவையாக கிளர்தெழலாம்,அதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது. மாநில அளவில் பள்ளி, கல்லூரி மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து திறமைகளை தேடி வளர்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.இந்திய பெண்கள் கால்பந்தாட்டத்தில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத சேது அணி தயாராக இருக்க வேண்டும். அதற்கு விளயைாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றும் முனைப்புடன் இருக்கும் தமிழக அரசும் பெருவாரியான ஆதரவை தரவேண்டும்.
-எல்.முருகராஜ்

Advertisement