மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுப்போக்குவரத்து கோவையில் வலம் வரப்போகும் எலக்ட்ரிக் பஸ்கள்

கோவை:கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக, 50 எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

கோவையில் இயங்கும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், தனியார் பஸ்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் கோவை நகர மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை அதற்கேற்றாற் போல் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை நகர மக்கள் தொகை, 50 லட்சத்தை கடந்து விட்டது. அதற்கேற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கோவை மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை மேற்கொண்டது.அதன் அடிப்படையில் ஒரு லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு குறைந்தது பொது போக்குவரத்து வசதிக்கு, 25 பஸ்களாவது இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அதற்கு மேலாக இருக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து வசதிகளை சமாளிக்க முடியும்.

அதற்கேற்ப கோவையிலுள்ள பொதுபோக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவேண்டும் அதற்காக கோவையில் முதற்கட்டமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புகை உமிழாத, 50 எலக்ட்ரிக் டவுன்பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கோவை கலெக்டர் கூறியதாவது: பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் அதற்காக கோவை நகரில் 50 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். இதனால் மற்ற பஸ்களில் எண்ணிக்கை குறையாது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் எலக்ட்ரிக் பஸ்கள் ஒரு சில மாதங்களில் வலம்வரப்போகின்றன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement