தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு

14


புதுடில்லி: மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக எலான் மஸ்க்குடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக இருநாட்டு தலைவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அரசின் திறனாய்வுத் துறையை (DOGE) நிர்வகித்து வருபவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.

அப்போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், எலான் மஸ்க்கின் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான முயற்சியை ஈடுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், "வாஷிங்டனில் நடந்த சந்திப்பின் போது பேசியது உள்பட பல விவகாரங்கள் பற்றி எலான் மஸ்க்குடன் பேசினேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமை உருவாக்குதலில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்தத் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement