குடியேற்றத்துறை அதிகாரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

1

மதுரை,:வழக்கு நிலுவையில் இல்லாத நபரை வெளிநாடு செல்ல அனுமதித்த உத்தரவை நிறைவேற்றாததால் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனிநீதிபதி பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு, அபராதமாக சட்டப்பணிகள் ஆணையத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க திருச்சி குடியேற்றத்துறை அதிகாரி சுகீபனுக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததில் தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.

புதுக்கோட்டை ஷேக் அலாவுதீன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக கிரிமினல் வழக்கு இல்லை. வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல என்னை அனுமதிக்க திருச்சி குடியேற்றத்துறை (இமிகிரேஷன்) அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: மனுதாரர் 3 வழக்குகளிலும் விடுதலையாகி விட்டார். அவர் மீது வழக்கு நிலுவையில் இல்லை. அவருக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தேடப்படும் நபர் (லுக் அவுட்) சுற்றறிக்கை காலாவதியாகி விட்டது. அதை செயல்படுத்த முடியாது. மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு 2024 நவ.22 ல் உத்தரவிட்டார்.

இதை நிறைவேற்றாததால் திருச்சி குடியேற்றத்துறை அதிகாரி சுகீபன் மீது உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

ஜன.23 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு: இந்நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் ஷேக் அலாவுதீன் ரியாத் செல்ல 'டிக்கெட்'டுடன் திருச்சி விமான நிலையம் சென்றார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல அனுமதி கோரி அவர் குடியேற்றத்துறை கவுன்டரை அணுகினார். அவரது பெயர் புதுக்கோட்டை எஸ்.பி.,பிறப்பித்த 'லுக் அவுட்' சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளதாகக்கூறி சுகீபன் தடுத்து நிறுத்தினார்.

இந்நீதிமன்ற உத்தரவை ஷேக் அலாவுதீன் சமர்ப்பித்துள்ளார். அவர் குடியேற்ற அனுமதி பிரிவில் டிச., 1 ல் 10 மணி நேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டார். விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டபோது அவர் பயணிக்க வேண்டிய விமானம் கொழும்பு புறப்பட்டது. விமான நிலையத்தில் மக்கள் முன்னிலையில் காரணம் இன்றி, எந்த தவறும் செய்யாத அவரை தடுத்து வைத்து அவமதித்துள்ளனர். வெளிநாடு செல்வது ரத்தானது.

இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சுகீபன் மீறியுள்ளார். அவர் ஷேக் அலாவுதீனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அபராதமாக ரூ.25 ஆயிரத்தை தமிழக சட்டப்பணிகள் ஆணையத்திற்கு சுகீபன் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்யக்கோரி சுகீபன் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: தனி நீதிபதியின் விசாரணையின்போது மனுதாரர் வருத்தம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படி ரூ.2000 மட்டுமே அபராதமாக விதிக்க முடியும். மனு அனுமதிக்கப்பட்டு தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement