செய்திகள் சில வரிகளில்...

மத்திய அரசின் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகம் சார்பில், பெரு நிறுவனங்களில் பணிப்பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, 'பி.எம் இன்டர்ன்ஷிப்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மீண்டும் வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், டிப்ளமா படிப்புகளில் தேர்ச்சி பெற்றோர், pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் இரண்டு, நடப்பாண்டு 2,329 கிராம ஊராட்சிகளில், 1,087.33 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் வழியே, 13,014 கிராமங்கள் பயனடைய உள்ளன. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ளார். திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 1,805 கோடி ரூபாய் மதிப்பில், 3,888 கி.மீ., நீளத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, 2,837 கி.மீ.,க்கு சாலைகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தெரிவித்துள்ளது.

Advertisement