சாம்பல் கழிவுகளால் மீஞ்சூர், அத்திப்பட்டில் அவதி காற்றின் தரத்தை கண்காணிக்க வலியுறுத்தல்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல்மின்நிலையம் ஒன்று மற்றும் இரண்டில், ஐந்து அலகுகள் வாயிலாக, தினமும், 1,830 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.
மேற்கண்ட அனல் மின்நிலையங்களில், மின் உற்பத்திக்காக, தினமும், 31லட்சம் கிலோ நிலக்கரி எரியூட்டும்போது, அதில், 40 சதவீதம் சாம்பல் கழிவுகள் வெளியேறுகின்றன. இவை தண்ணீருடன் கலந்து ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக, 8 கி.மீ., தொலைவில் உள்ள செப்பாக்கம் கிராமத்தின் அருகே கொண்டு வந்து குவிக்கப்படுகிறது.
தண்ணீர் வற்றியபின், காய்ந்த சாம்பல் துகள்கள், சாலை கட்டுமான பணிகளுக்கும், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
செப்பாக்கம் கிராமத்தில் குவிக்கப்படும் சாம்பல் கழிவுகள், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படும்போது வெளியேறும் புகையுடன் கூடிய துாசியும் காற்றில் கலந்து, சுற்றியுள்ள கிராமங்களில் புழுதியாகி படிகிறது.
மேலும் அத்திப்பட்டில் உள்ள நிலக்கரி முனையம் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளாலும் காற்று மாசடைந்து வருகிறது.
சாம்பல் கழிவுகளால் செப்பாக்கம், மவுத்தம்பேடு, நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் மற்றும் மீஞ்சூர் நகரப்பகு பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இப்பகுதிகள் எப்போதும் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.
மாசுவால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எந்தவொரு கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை.
மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் கருவி பொருத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு செயலர் டி.ஷேக் அகமது கூறியதாவது:
சாம்பல் கழிவுகள் மற்றும் நிலக்கரி முனையங்களால் மாசு அதிகரித்து வருவது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.
நிலக்கரி முனையம், சாம்பல் கிடங்கு பகுதிகளில் தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. காற்றில் மாசு கலந்து அதன் தரம் கேள்விக்குறியாகி வருகிறது. மக்கள் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் புதிய அனல் மின்நிலையங்களும் துவங்கப்பட உள்ளன.
இதனால் மீஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்களின் மேலும் மாசு அதிகரிப்பதற்கான வாய்புகள் உள்ளதால் உரிய கண்காணிப்பு அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு