3வது குழந்தையை மறைத்ததால் வேலையை இழந்த ஆசிரியை

15

போபால் : மத்திய பிரதேசத்தில், தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்த ஆசிரியையின் வேலை பறிபோனது.


மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழகம் உட்பட தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என, இங்குள்ள அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.

நடைமுறை



அதனால், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி மக்களுக்கு ஆலோசனை கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்கையில், மத்திய பிரதேசத்தில் 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு குழந்தைகள் கொள்கை நடைமுறையில் உள்ளது. இதன்படி, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றால், அரசு ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும்.


இந்த கொள்கை உருவாக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு ஆசிரியை, தன் மூன்றாவது குழந்தை குறித்த தகவலை மறைத்ததால், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


சத்தார்புர் மாவட்டம் தமோராவில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ரஞ்சிதா சாஹு, சட்டவிதிகளை மீறி மூன்றாவது குழந்தை பெற்றதாக, 2022ல் புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டும், அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அவரை பணியில் இருந்து நீக்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதற்கு முன்னரும், இதே காரணத்துக்காக பள்ளி கல்வித் துறையில் பலர் வேலையை இழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் பள்ளிக் கல்வித் துறை, 1,200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், விசாரணை நடந்து வருகிறது.

தெலுங்கானா



இரண்டு குழந்தைகள் தொடர்பாக தேசிய அளவில் எந்த ஒரு கொள்கையும் இல்லை. அதே நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, மத்திய பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் இது தொடர்பாக சட்டங்கள் உள்ளன.


இது, பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் அல்ல; ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது. அதிக குழந்தைகள் பெற்றால் தொகுதிகள் குறையாது. ஆனால், அதே நேரத்தில் வேலை போய்விடுமே.

Advertisement