எஜமான விசுவாசம் காட்டும் அ.தி.மு.க.,: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

18

சென்னை: 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தை வைத்து, நீதியின் வாயிலாக, நாட்டின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சி தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக, தி.மு.க., தன் போராட்டத்தை தொடரும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதிய கடிதம்:



கவர்னரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளை காத்திடும் மகத்தான தீர்ப்பை, தி.மு.க., அரசு முன்னெடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. பார்லிமென்ட் கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.பி.,க்களின் குரல் ஓங்கி ஒலித்தது. கூட்டணி கட்சி எம்.பி.,க்களுடன் இணைந்து, நியாயத்தை எடுத்துரைத்தது.


உரிமைக்கான குரலாக துவக்கப்பட்ட, தி.மு.க.,வின் உரிமைப் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் ஒருபுறம், ஆட்சி நிர்வாகம் மறுபுறம் என, தி.மு.க., பணியும் பயணமும் தொடர்கிறது.


மத்திய அரசு, தன்னால் வெற்றி பெற முடியாத மாநிலங்களில், மாற்றுக்கட்சி அரசுகளின் செயல்பாடுகளை தடுக்கவே, கவர்னர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தொடருகிறது.


தி.மு.க., எப்போதும் சொல்லி வருவதுபோல, கவர்னர் பதவி என்பது மத்திய, மாநில அரசுக்கு இடையிலான தபால்காரர் பணிதான் என்பதை, உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வாயிலாக புரிய வைத்திருக்கிறது. 'நீட்' தேர்வுக்கு எதிரான, நம் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக்கட்சி கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.


பா.ஜ.,வினர், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்களின் வழியில், அ.தி.மு.க.,வினரும் புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.


மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என, கருணாநிதி மொழிந்த முழக்கத்தை முன்வைத்து, நீதியின் வாயிலாக, நாட்டின் ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக, தி.மு.க., தன் போராட்டத்தை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement