ஒரகடம் சாலையில் விழுந்து கிடக்கும் பேரிகேட் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கம் பணி, 2022ம் ஆண்டு, ஜனவரியில் துவங்கியது.

மூன்று ஆண்டுகளை கடந்து, ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் சாலை குறுகளானது. இதனால், படப்பை பகுதியில் ஏற்படும் நெரிசலை தடுக்க, படப்பை வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதற்காக, ஒரகடம் மேம்பாலம் அருகே பேரிகேட் அமைத்து, வாலாஜாபாத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம் வழியே திருப்பி விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இரவு நேரங்களில் தடையை மீறி அதிவேகமாக செல்லும் லாரி மோதியதில், பேரிகேட் சாலையில் விழுந்துள்ளது.

ஒரு மாததத்திற்கு மேலாக சாலையில் விழுந்துள்ள பேரிகேட்களால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, ஒரகடம் மேம்பாலம் அருகே, சாலையில் விழுந்து கிடக்கும் பேரிகேட்களை அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement