காரைக்குடி மாணவிகளின் குறும்படம் தேசிய அளவில் முதலிடம்

சிவகங்கை:‛மூத்த குடிமக்களின் பராமரிப்பு உரிமைகள்' என்ற தலைப்பில் காரைக்குடி அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் தயாரித்த குறும்படம் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது.



டில்லி தேசிய சட்டப்பணிகள் ஆணையம், மாணவர்களிடையே பல்வேறு கருத்துக்களில் சட்ட விழிப்புணர்வு என்ற மைய கருத்தை அடிப்படையாக கொண்டு குறும்படம் தயாரிப்பு போட்டியை நடத்தியது.


இதில், சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிந்துரையின் பேரில் காரைக்குடி அரசு சட்டக்கல்லுாரி 2 ம் ஆண்டு எல்.எல்.பி., மாணவர்கள் நதியா, இசைமொழி, அபினேஷ், யோகிதா, விஜயபிரியா ஆகியோர் நடித்து ‛மூத்த குடிமக்களின் பராமரிப்பு உரிமைகள்' என்ற தலைப்பில் குறும்படம் தயாரித்து அனுப்பினர்.

இக்குறும்படம் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இதற்கான கேடயத்தை சிவகங்கையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் மாணவிகளுக்கு வழங்கினார்.
மாணவிகள் கூறியதாவது: தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, கல்லுாரி முதல்வர் முருகேசனின் ஊக்குவிப்பால், இந்த குறும்படம் தயாரித்தோம். தேசிய அளவில் முதலிடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.

Advertisement