ரேஷன் கடையாக மாறிய அங்கன்வாடி அரிசி மூட்டைகள்; மத்தியில் குழந்தைகள் கொஞ்சிமங்கலத்தில் பெற்றோர் திக்... திக்...

வானுார் : கொஞ்சிமங்கலத்தில் அங்கன்வாடி மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் மூட்டைகள் சரிந்து குழந்தைகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

வானுார் அடுத்த கொஞ்சிமங்கலத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 750 ரேஷன் கார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ரேஷன் கடை, ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் இல்லை.

ரேஷன் கடைக்கு வரும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மூட்டைகள் கிராமத்தில் ஆங்காங்கே அடுக்கி வைப்பது வழக்கம். தற்போது, அங்குள்ள அங்கன்வாடி மையத்தை ரேஷன் பொருட்கள் வைக்கும் குடோனாக மாற்றியுள்ளனர்.

அங்கன்வாடி மையத்திற்கு் ரேஷன் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்துள்ளனர். அங்கன்வாடியில், ஏராளமான குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். குழந்தைகள் ஓடி விளையாடும்போது, அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகள் சரிந்து விழ வாய்ப்பு உள்ளது.

அரிசி மூட்டைகள் இடையே குழந்தைகள கல்வி பயில்வது அங்கன்வாடி ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி ஊராட்சி தலைவர், கவுன்சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மாற்று இடத்தில் ரேஷன் பொருட்களை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ரேஷன் பொருட்களை மாற்று இடத்தில் வைப்பதற்கும், புதிய ரேஷன் கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து ரேஷன் கார்டுகளையும் கலெக்டரிடம் ஒப்படைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement