24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான குழாய் பணிகள் -விரைவுபடுத்த எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத்திற்கான தனித்திட்ட பணிகள் நடந்து வருவதை விரைவுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.

மக்களுக்கான குடிநீருக்காக அய்யனார் கோயில் ஆற்று நீர்வரத்தை ஆதாரமாக ஆறாவது மைல் நீர் தேக்கத்தின் மூலம் 80 லட்சம் குடிநீர் கிடைக்கிறது.

2018 முதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ. 197.79 கோடி மதிப்பில் பணிகள் நடந்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் அம்ருத் 2.0 திட்டத்தில் ராஜபாளையம் நகராட்சி 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டம் கடந்த ஆண்டு தொடங்கி முதல் கட்டமாக 14 வார்டுகளில் 10,200 இணைப்புகளுக்கு என நிதிகள் ஒதுக்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி ஆறாவது மேல் நீர்த்தேக்கத்தில் இருந்து மாடசுவாமி கோயில் தெருவில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கான 9.5 கி.மீ., துாரத்திற்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது வரை இதில் 45 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement