அமெரிக்க விசா ரத்து நடவடிக்கையில் 50 சதவீதம் இந்திய மாணவர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 327 வெளிநாட்டு மாணவர்களின் விசா சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைகளில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். 'எப் - 1' விசாக்கள் வாயிலாக இந்த மாணவர்கள், படித்துக் கொண்டே வேலை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கல்வி நிலையங்களில் ஹமாஸ் - இஸ்ரேல் பிரச்னை உட்பட பல்வேறு விவகாரங்களுக்கு போராட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் துவங்கியுள்ளது.

இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, 'செவிஸ்' எனப்படும் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் தகவல் அமைப்பு போர்ட்டல் வாயிலாக, வெளிநாட்டு மாணவர்கள் கடந்த நான்கு மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு எடுத்த கணக்கெடுப்பின்படி, 327 மாணவர்களின் விசாக்கள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீதான அமெரிக்காவின் அடக்குமுறையை வெளிக்கொணரும் வகையில், அங்குள்ள அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

அதில், சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட 327 மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 14 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். தென்கொரியா, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Advertisement