ராணுவத்துக்கு இணையானது பொதுத்துறை நிறுவனங்கள் என்.எல்.சி., சேர்மன் பெருமிதம்

நெய்வேலி : என்.எல்.சி., தலைமை அலுவலக வளாகத்தில் 16ம் ஆண்டு பொதுத்துறை நிறுவன நாள் விழா நடந்தது.

என்.எல்.சி., இயக்குநர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாச்சலம் மற்றும் விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.

சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பொதுத்துறை நிறுவனக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:

ராணுவ வீரர்கள் நாட்டின் பாதுகாப்பை கவனித்துக் கொள்வது போல, பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளை கவனித்துக் கொள்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின் உருவாக்கப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டத்தில், 29 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த 2024-25ம் நிதியாண்டில், என்.எல்.சி., அனைத்து துறைகளிலும் சிறப்பான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 68 ஆண்டுகளில் 6 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை பெற்றிருந்த என்.எல்.சி., நிறுவனம் தற்போது, வரும் 2030ம் ஆண்டிற்குள் 20 ஜிகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. அதில், 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான பசுமை மின் உற்பத்தி இருக்கும் என்றார்.

Advertisement