சேட்டைக்காரன் 'மிஸ்டர். சோட்டு'

''சோட்டுவின் சேட்டைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சில நாட்களிலேயே, பலரின் செல்லப் பிள்ளையாகிவிட்டான். அவனை திட்டினால், கமெண்ட் பகுதியில் பலரும் எனக்கு எதிராக அம்புகளை வீசுகின்றனர். இந்த அன்பை, அடையாளத்தை தந்தது, என் செல்லக்குட்டி தான்,'' என்கின்றனர், 'மிஸ்டர். சோட்டு'வின் உரிமையாளர்கள் சுந்தர் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி.
நம்மிடம் பகிர்ந்தவை:
திருமணத்திற்கு பிறகு, என் முதல் பிறந்த நாளில், கணவர் சுந்தரின் அன்பு பரிசாக வீட்டிற்குள் நுழைந்தான் சோட்டு. இவன், லேப்ரடார் ப்ரீட்; ஆறு வயதாகிறது. அதுவரை செல்லப்பிராணி வளர்த்த அனுபவம் இல்லாததால், இவனிடம் இருந்து, ஒரு குழந்தை வளர்ப்பதற்கான அனைத்து பயிற்சிகளையும் எடுத்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு, சுட்டியாக, குறும்பான,சேட்டையின் மறு உருவமாக இருப்பான்.
வீட்டில், இவனது 'வாய்வரிசை' காட்டாத இடமே இருக்காது. சோபா, செருப்பு, சாக்ஸ், ஷூ என எல்லாவற்றிலும், இவனது பல்தடம் இருக்கும். இரவெல்லாம் துாங்கவே முடியாது. ஒருமுறை, வீட்டின் சாவியை உள்ளே எடுத்து சென்று, கதவை 'லாக்' செய்துவிட்டான். எவ்வளவு முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. ஜன்னல் வழியாக, சோட்டுவுக்கு பிஸ்கட் கொடுத்து, ஒரு குச்சியின் நுனியில் காந்தம் கட்டி, அதன் மூலம் சாவியை வெளியே எடுத்து திறப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. இப்படி, இவன் செய்யும் குறும்புத்தனத்தை வெளியில் பகிர்ந்த போது, நிறைய பேர் ரசித்ததை காண முடிந்தது.
இதனால் துவக்கத்தில், இவனது வித்தியாசமான முகபாவனைகளை, போட்டோ எடுத்து, அதில் நகைச்சுவையாக டயலாக் எழுதி வெளியிட்டோம். நல்ல வரவேற்பு இருந்தது. அதை வீடியோவாக எடுத்து வெளியிடுகிறோம். எங்கள் சேனலில், செல்லப்பிராணி வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள், சந்தேகங்களுக்கு விடை அளிப்பது, அவற்றின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையில் ஏற்படும் மாற்றங்கள், செல்லப்பிராணியை உடன் கொண்டு செல்ல அனுமதிக்கும் இடங்களை வீடியோவாக பதிவேற்றுகிறோம். இவனுடன் வெளியிடங்களுக்கு சென்றால், பலரும் எளிதில் அடையாளம் கண்டு செல்பி எடுக்கின்றனர். இதை மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம். செல்லப்பிராணி வளர்ப்பவர்களால் மட்டுமே, இந்த அன்பை உணர, பகிர்ந்து கொள்ள முடியும், என்றனர்.