ஆந்திர மாநில எல்லையில் செயல்படாத, ‛அவுட்போஸ்ட்'

பொதட்டூர்பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ஆந்திர மாநில எல்லையும் குறுக்கிடுகிறது. கோரகுப்பம் அடுத்து ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட பலிஜிகண்டிகை, எஸ்.ஆர்.கண்டிகை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

இதில், தமிழக எல்லையோர கிராமமான கோரகுப்பம் அருகே, பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் சோதனைசாவடி அமைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சோதனைசாவடி செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இந்த சோதனை சாவடியில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் ஆந்திர மாநில எல்லையில், பாலசமுத்திரம் போலீசார், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமும் வசூலிக்கின்றனர்.

இப்படி அபராதம் செலுத்துவோரில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்கள், ஆந்திர மாநிலத்திற்கு செல்வோர் அல்ல. அந்த வழியாக, திருவள்ளூர் மாவட்டத்தின் ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டைக்கு பயணிப்பவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு இடையே பயணிக்க, ஆந்திர மாநில போலீசாருக்கு அபராதம் செலுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், கோரகுப்பம் பகுதியில், அங்குள்ள சோதனைசாவடியை தமிழக போலீசார் முழுவீச்சில் செயல்படுத்தினால், விதிமீறும் வாகனஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க முடியும்.

ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைவோரை சோதனை செய்ய இயலும்; கடத்தலை தடுக்கவும் வழி ஏற்படும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement