சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.46 லட்சம் மோசடி: ஒருவர் கைது * ஒருவர் கைது; இன்னொருவருக்கு வலை 

கோவை; சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக, ரூ.46 லட்சம் பெற்று மோசடி செய்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்னொருவரை போலீசார் தேடுகின்றனர்.

போலீசார் கூறியதாவது: பரமக்குடி, நல்லுக்குறிச்சியை சேர்ந்தவர் பாரதிராஜா, 47; ஆக்டிங் டிரைவர்.இவருக்குபழக்கமானவர் செந்தில் குமார். இருவரும் இணைந்து, வெளிநாட்டு வேலை வேண்டும் என இணையத்தில் தேடிய, 500 பேரின் 'டேட்டா' சேகரித்துள்ளனர். தொடர்ந்து, சின்னியம்பாளையம் பகுதியில் அலுவலகம் அமைத்து, 'டெலி காலர்' பணிக்கு ஒருவரை பணியமர்த்தி, 500 பேரிடமும் பேசியுள்ளனர்.

அவர்களிடம், சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், தாங்கள் ஆட்களை தேர்வு செய்து அனுப்புவதாகவும், மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் செல்வதற்கு ரூ. 3.75 லட்சம் செலவாகும் எனவும், அதில் ஒரு லட்சம் ரூபாயை பணி நியமன ஆணை வழங்கும் போது கொடுக்க வேண்டும், மீதிப்பணம் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும் எனவும் மூளைச்சலவை செய்துள்ளர். 96 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு கடந்த 1ம் தேதி ஆன்லைனில் நேர்காணல் நடத்தி, 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுவதாகவும், அப்போது ரூ. 1 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததையடுத்து, நேற்று முன்தினம் 46 பேர், ஆவணங்களுடன் சின்னியம்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில், பணம்செலுத்தியுள்ளனர். பணி நியமன ஆணையை, அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து கொடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து, அவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று மதிய விருந்துடன், பணி நியமன ஆணையை கொடுத்துள்ளனர்.

ஆணையை பார்த்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர், 24 என்பவருக்கு சந்தேகம் வந்துள்ளது. அவர், தனது பணத்தை திருப்பித் தருமாறு பாரதிராஜாவிடம் கேட்டதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புகாரின்படி, பாரதிராஜா கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மோசடிக்கு மூளையாக செயல்பட்ட செந்தில் குமாரை தேடி வருகிறோம்.

இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement