மருதாண்டான் வாய்க்காலை துார் வாரும் பணி தீவிரம்


கிருஷ்ணராயபுரம் :லாலாப்பேட்டை, மருதாண்டான் வாய்க்காலை பொக்லைன் கொண்டு, துார் வாரும் பணிகள் நடந்து
வருகின்றன.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, தென்கரை வாய்க்கால் பிரிந்து லாலாப்பேட்டை வழியாக பெட்டவாய்த்தலை வரை செல்கிறது.
இதில் மருதாண்டான் வாய்க்கால், லாலாப்பேட்டை சிவன் கோவில் பகுதியில் இருந்து கருப்பத்துார், கள்ளப்பள்ளி, திம்மாச்சிபுரம் வரை செல்கிறது. பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி வெற்றிலை, வாழை, நெல், தென்னை, மாம்பழம் ஆகிய சாகுபடி நடந்து வருகிறது.

தற்போது மருதாண்டான் சிறிய பாசன வாய்க்காலில், அதிகமான கழிவுகள் இருப்பதால், விளை நிலங்களுக்கு தண்ணீர் குறைந்தளவே சென்றது.


விவசாயிகள் கோரிக்கையின்படி, மாயனுார் நீர்வளத்துறை நிர்வாகம் சார்பில், மருதாண்டான் வாய்க்கால் ஆரம்ப பகுதியில் இருந்து, கடைசி வரை செல்லும் பாசன வாய்க்கால் முழுவதும், பொக்லைன் இயந்திரம் கொண்டு துார்வாரும் பணிகள் நடந்தன.
மாயனுார் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக், கள ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

Advertisement