குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி

லக்னோ: குஜராத் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, குஜராத் அணிக்கு கேப்டன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் வழக்கம் போல பேட்டிங் செய்ய வந்தனர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். பவர் பிளேவில் விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் கில் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சாய் சுதர்சன் 46 ரன்கள் எடுத்திருந்த போது, திக்வேஷ் சிங் வீசிய பந்தில் சாய் சுதர்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அப்துல் சமாத் தவறவிட்டார். இதைத் தொடர்ந்து, அரைசதம் அடித்த சாய் சுதர்சன் 56 ரன்னிலும், கில் 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் குவிக்க கஷ்டப்பட்டனர். பட்லர் 16 ரன்களும், ரூதர்போர்டு 22 ரன்களும் குவித்தனர். இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.

ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுக்களும், திக்வேஷ், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த லக்னோ அணிக்கு, கேப்டன் ரிஷப் பண்ட் (21), மார்க்ரம் (58) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பிறகு வந்த நிகோலஸ் பூரன் அதிரடியை காட்டினார். சிக்சர் மழையை பொழிந்தார். 34 பந்துகளில் 7 சிக்சருடன் 61 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இளம் வீரர் பதோனி (28 நாட் அவுட்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.

மேலும், குஜராத் அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் கடைசி 4 ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றிருந்தது. தற்போது, அந்த தொடர் வெற்றிக்கு லக்னோ முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 2வது இடத்திலும், லக்னோ 3வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

Advertisement