மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை

சென்னை: கடந்த மூன்றரை மாதங்களாக காலணி அணியாமல் இருந்து வந்த அண்ணாமலை, பா.ஜ., மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று, காலணியை அணிந்தார்.
தமிழக பா.ஜ., மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். சென்னை வானகரத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை அண்ணாமலை கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறினார். அப்போது, தி.மு.க., அரசுக்கு எதிராக காலணி அணியாமல் இருந்து வந்த அண்ணாமலைக்கு, மேடையிலையே நயினார் நாகேந்திரன் ஒரு கோரிக்கை வைத்தார்.
தான் வாங்கி வந்த காலணியை கொடுத்து, இதனை அணிந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அண்ணாமலையும் அவரது கோரிக்கை ஏற்று, மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணியை அணிந்து கொண்டார்.
அப்போது, பேசிய நயினார் நாகேந்திரன், "2026ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி. எனவே, அண்ணாமலை இன்றே காலணி அணிய வேண்டும்," என்று கூறினார்.
சபதம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தை கண்டித்து பா.ஜ., மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த டிச.,27ம் தேதி தனது வீட்டின் முன்பு 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். அப்போது, தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என்று சபதம் போட்டிருந்தார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போதே, அண்ணாமலை தான் அணிந்திருந்த ஷூவை கழற்றியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தமிழக அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அண்ணாமலையை மாற்றப்பட்டிருக்கும் சூழலில், அவர் காலணியை அணிந்து கொண்டுள்ளார்.
ஒற்றை இலக்கு
இதனிடையே, பா.ஜ.,வின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து கூறி அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், "என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்! வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், நயினார் நாகேந்திரன் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தி.மு.க.,வை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.








மேலும்
-
மோகன் பகான் அணி சாம்பியன் * பெங்களூருவை வீழ்த்தியது
-
பொதுக்குழுவால் தான் தலைவரை தேர்வு செய்ய முடியும்; அன்புமணி பரபர அறிக்கை
-
இந்திய நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா தாக்குதலால் பரபரப்பு
-
கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
-
முதல்வர் ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? இபிஎஸ் கேள்வி
-
சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்