அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு

10


சென்னை: '' தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


மாநில தலைவராக பொறுப்பேற்கும் விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு இதற்கு முன் இருந்த தலைவர்களே காரணம். என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகம் முழுதும் அண்ணாமலை பயணம் செய்து இந்த கோபுரத்தை கட்டி முடித்து மேல் கலசம் வைத்துள்ளார். நமது வேலை, அதற்கு கும்பாபிஷேகம் மட்டும் தான் செய்ய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதனை நடத்தப் போகிறோம்.

கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதா, நாடு ஆள்பவர்கள் காடு ஆளப்போகின்றனரா என்பதை கடவுள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் 2026 ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும். தாமரை மலர்ந்தே தீரும். வரும் தேர்தலில் 4 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். அதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வளவு பெரிய கட்சியில் பெரிய பொறுப்பை தந்து உள்ளீர்கள். அதனை பொறுப்பாக எடுத்து செயல்பட வேண்டும் என்றால் கூட பயமும் அச்சமும் உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து விஷயத்திலும் அண்ணாமலையின் பாணி தனி. என்னுடைய விஷயம் வேறு. அவர் புயலாக இருந்தால், நான் தென்றலாக தான் இருக்க முடியும்.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக மக்களால் ஏற்க முடியாத ஆட்சியாக, ஊழல் நிறைந்த ஆட்சியாக,பெண்களை மதிக்காத ஆட்சியாக, பாலியல் வன்கொடுமை நடத்துகின்ற ஆட்சியாக , மதுவுக்கு அடிமையாக்கும் ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.

என்னிடம் பொறுப்பை அண்ணாமலை கொடுத்து உள்ளார். அடுத்த 3 ஆண்டில் நான் வேறு ஒருவரிடம் கொடுக்க வேண்டும். இதற்கு இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

இ.பி.எஸ்., வாழ்த்து



நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement