பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை: துபாய் தொடர்பு அம்பலம்

2

புதுடில்லி: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ராணா, துபாயில் சந்தித்த மர்ம நபர் பற்றி என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.


மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு தந்த பிரதான குற்றவாளியான பயங்கரவாதி தஹாவூர் ஹுசைன் ராணா, 64, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதை அடுத்து அவனை, 18 நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. உயர் பாதுகாப்பு உள்ள அறையில் வைத்து, அவனிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராணாவிடம் நடத்திய விசாரணையில் மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
மும்பை தாக்குதல் நடந்த 2008ம் ஆண்டில் ராணா மும்பை, டில்லி, ஆமதாபாத், கொச்சி, ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வந்துள்ளான். துபாயை சேர்ந்த ஒரு மர்ம நபருக்கு மும்பையில் தாக்குதல் நடக்கவிருப்பது பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.
மும்பை தாக்குதல் நடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26க்கு முன், ராணா துபாய்க்கு சென்றான். அந்த மர்ம நபரை சந்தித்து பேசியிருக்கிறான்.


துபாய் மர்ம நபர் யார் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார்? என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தோண்டித் துருவுகின்றனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,ஐயில் யாருடனாவது தொடர்பில் இருந்தாரா? அல்லது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தாரா?
அல்லது லஷ்கர் இ தொய்பா அமைப்பினருடன் தொடர்பில் இருந்தாரா? என விசாரணை நடந்து வருகிறது.


ராணா தொடர்பான பைல்களை அமெரிக்க அதிகாரிகள் என்ஐஏ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அதில், துபாய்க்கு சென்று மர்ம நபரை ராணா சந்தித்தது பற்றி கூறப்பட்டுள்ளது. ராணாவின் என்.ஐ.ஏ., காவல் வரும் ஏப்ரல் 28ம்தேதி நிறைவடைகிறது.
ஆஷிஷ், ஜெயா தலைமையிலான என்.ஐ.ஏ., குழுவினர் நடத்தும் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement