திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரை ஏமாற்றிய பெண் கைது

சென்னை:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவைச் சேர்ந்தவர் ராமநாதன், 63; சித்த வைத்தியர். இவர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

என் மனைவி, 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். தன் இரண்டு பிள்ளைகளும், திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதால், மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். இதற்காக, செய்தித்தாளில் ஆதரவற்ற விதவை மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்தேன்.

இதைப்பார்த்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த கீதா என்பவர் தன்னை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, மொபைல் போனில் பேசி வந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி, திருமணம் செய்து கொள்வதாக கூறியதை உண்மை என நம்பி, 2.5 கிராம் எடையிலான தாலி, ஒரு ஜோடி வெள்ளி மெட்டி, புது புடவை வாங்கி கொடுத்தேன்.

பின், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில், உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரை சென்று பார்த்துவிட்டு போகலாம் என, கீதா அழைத்துச் சென்றார்.

அங்கு, மருத்துவமனையின் வரவேற்பு அறையில் அமர வைத்துவிட்டு, கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

அதன் பின்னரே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய பெண் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், மோசடியில் ஈடுபட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த கீதா, 57, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து, 2.5 கிராம் நகை, வெள்ளி மெட்டி, புடவை ஒன்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கீதா, இதேபோல் பல பேரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது, விசாரணையில் தெரியவந்தது.

Advertisement