இலக்கியப்பீடம் சார்பில் முப்பெரும் விழா

சென்னை:'இலக்கியப்பீடம்' மாத இதழ் சார்பில் 'கலைமாமணி' விக்கிரமனின் 97ம் ஆண்டு பிறந்த நாள் விழா, இலக்கியப்பீடம் மாத இதழின் 29வது ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா நேற்று நடந்தது.

மேற்கு மாம்பலத்தில் நடந்த விழாவில், சிறந்த கலை சேவைக்கான 'விக்கிரமன் விருது' திரைப்பட இயக்குனர் காரைக்குடி நாராயணனுக்கும், சிறந்த எழுத்து சேவைக்கான 'சிவசங்கரி விருது-' எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்திற்கும், எழுத்தாளர் மாலன் வழங்கினார். 'அமுதசுரபி' மாத இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் கவிஞர் கார்முகிலோன் இணைந்து நடத்திய கவிதை போட்டியில், முதல் பரிசு உதயை வீரையன்; இரண்டாம் பரிசு, அருணா; மூன்றாம் பரிசு புலமைதாசனுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஒன்பது பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு, பார்கவி குமார்; இரண்டாம் பரிசு, முருகேசன்; மூன்றாம் பரிசு, நாகராஜனுக்கு வழங்கப்பட்டது. மேலும், 12 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

எழுத்தாளர் அரவிந்த் விக்ரம் தொகுப்புரை வழங்கினார். இலக்கிய சேவையாளர், மாம்பலம் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Advertisement