நெல் கொள்முதல் நிலையம் பழையனூரில் திறக்கப்படுமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூர் ஊராட்சியில், 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது, இப்பகுதியில் 2,500 ஏக்கர் பரப்பளவில் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய, நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, 3 கி.மீ., தூரத்தில் உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர்.

இதனால், பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, திருவாலங்காடு ஒன்றியத்தில் ஆறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அதேபோல, பழையனூர் கிராமத்திலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

நெல் கொள்முதல் நிலைய கட்டடம், கடந்தாண்டு 34 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை நெல் கொள்முதல் நிலையம் ஒதுக்கப்படவில்லை. கட்டடம் இல்லாத கிராமங்களில் கூட நெல் கொள்முதல் நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுகின்றனர்.

இதனால், அறுவடை செய்த நெல்லை நீண்ட தூரம் எடுத்து சென்று விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால், எங்களுக்கு கூடுதல் செலவீனம் அதிகரித்துள்ளது. எனவே, நெல் கொள்முதல் நிலையம் பழையனூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement