அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க நாகை போலீசில் புகார்

நாகப்பட்டினம்: ஹிந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வெளிப்பாளையம், போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகையை சேர்ந்த வழக்கறிஞர் தங்க கதிரவன், நாகையை அடுத்த வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனு:

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ள காணொளியைக் கேட்டேன். அந்த பேச்சு, தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அவரது பேச்சில் ஒரு விலைமாது வீட்டிற்கு ஒருவன் சென்றான். அவனிடம் விலைமாது நீங்க சைவமா, வைணவமா எனக் கேட்டாள். அவனுக்கு ஏதும் புரியவில்லை.

அதற்கு அப்பெண்மணி அளித்த பதில் குறித்து, அமைச்சர் பாலியல் தொழிலாளிகளை மிகவும் அருவருப்பாக, கொச்சையாகப் பேசியும், ஹிந்து மதத்தின் சைவ, வைணவக் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளை அவமதித்தும், மத உணர்வுகளை சீர்குலைத்தும், பொது நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில், பொதுமேடையில் பேசியிருப்பது கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

மக்களின் மத உணர்வுகளை அவமதிப்பதன் வாயிலாக, வேண்டுமென்றே, இந்த செயலில் அமைச்சர் பதவியில் உள்ள அரசு ஊழியரான பொன்முடி ஈடுபட்டுள்ளார்.

இது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, அவர் எடுத்திருக்கும் சத்திய பிரமாணத்திற்கும், ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடி மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement