பள்ளி கல்வி துறைக்கு சாதனையாளர் விருது

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்களின், 'ஆதார்' பதிவை துல்லியமாக மேற்கொண்டு முதலிடம் பெற்றதால், தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1.13 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு ஊக்கத்தொகை, உதவித்தொகைகள் வழங்குவதால், அனைவருக்கும் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. வங்கி கணக்கு துவங்க ஏதுவாக, 'பயிலும் பள்ளியிலேயே ஆதார்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, 70 சதவீத மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் பணி செய்யப்பட்டது.

இந்த சிறந்த இலக்கை தமிழகம் மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையை பாராட்டி, மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம், தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, 'சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement